அழ வைக்க நினைத்தால் அழ வைக்கவும், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைக்கவும், உணர்ச்சி வசப்படுத்தவும் அவரால் மட்டுமே முடியும். பொன்விழா நாயகன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 


நூற்றாண்டு வரலாறு கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய கூட்டத்தொடரின் போது உரையாற்றினார்.

அதில், “பொது நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை மீதான அறிக்கை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. அதில் முதல் முறையாக நீர்வளத்துறையில் தீர்மானம் கொண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

திமுக பொதுச்செயலாளரும், அவை முன்னவராகவும் இருக்கக் கூடிய துரைமுருகனின் இலாகாவைச் சேர்ந்த மானியக் கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நூற்றாண்டு பெருமைமிக்க இந்த அவைக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே வந்த பெருமைக்குரியவர் துரைமுருகன். கடந்த 50 ஆண்டுகளாக அவை நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.

அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு சட்டமன்றத்தை அலங்கரித்தவர்களில் முக்கிய மற்றும் மூத்த உறுப்பினராவார். ஆகையாலேயே அவையின் முன்னவராக வீற்றிருக்கிறார். தலைவர் கலைஞர் மற்றும் பேராசிரியர் மறைவுக்கு பிறகு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்துக்கொண்டு எனக்கு வழிகாட்டியாக இருந்துக்கொண்டிருக்கிறார்.

என்னை இளைஞராக பார்த்ததாக அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் நான் அவரை கலைஞரிடத்திலும் பேராசிரியர் இடத்திலும் வைத்து பார்க்கிறேன். மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி ஆட்சிக்கும் கட்சிக்கும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்.

தலைவரும் கலைஞர் அமைச்சரும் துரைமுருகனும் நேரம் கடப்பதே தெரியாத அளவுக்கு பேசிக்கொண்டிருப்பார்கள். அதனை கண்டு எங்களுக்கே பொறாமையாக இருக்கும். “ஒருதாய் வயிற்றில் பிறக்க வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தவர்கள் நாம்” என பேரறிஞர் அண்ணாவின் சொற்றொடருக்கு எடுத்துக்காட்டுதான் தலைவர் கலைஞர் - துரைமுருகன் உறவு.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு அருகே அல்ல, அவரது இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்திருப்பவர் துரைமுருகன். அந்த இடம் எல்லோருக்கும் கிடைத்திடாது. எந்தத் துறையில் எந்த பதவியில் வகித்தாலும் அதில் தனது முத்திரையை பதிப்பார் அமைச்சர் துரைமுருகன். இதைவிட பெரிய திறமை ஒன்று அவரிடம் உள்ளது. இந்த கூட்டத்தை அழ வைக்க நினைத்தால் அழ வைக்கவும், சிரிக்க வைக்க நினைத்தால் சிரிக்க வைக்கவும், உணர்ச்சி வசப்படுத்தவும் அவரால் மட்டுமே முடியும்.

இவ்வாறு மிகப்பெரிய ஆற்றல் பெற்றவர் திமுக அரசின் அமைச்சராக இருப்பது அரசுக்கும் கழகத்துக்குமே பெருமை. அவை முன்னவாரக அவரை பெற்றிருப்பது சட்டப்பேரவைக்கே பெருமை. சட்டமன்றத்தில் 50 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து பொன்விழா நாயகனாக உருவெடுத்திருக்கிறார்.

அத்தகைய பொன்விழா நாயகனை பாராட்டும் வகையில் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து மாநிலத்தி வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவையின் மாண்பை காப்பதில் நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.

மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இந்த சட்டப்பேரவை மனதார பாராட்டுகிறது என்ற தீர்மானத்தை முன்வைக்கிறேன். ஆருயிர் அண்ணன் அமைச்சர் துரைமுருகனை மனதார வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்