காணாமல் போன சிறுவனை துரிதமாக மீட்ட பல்லாவரம் போலீசாரின் அசத்தல் பிளான்!

 


காணாமல் போன 4வயது சிறுவனை வாட்ஸ்அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த பல்லாவரம் போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் ராம் (வயது-30) இவருடைய ஓரே மகனான அங்குஸ் குமார் (வயது-4) இவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

நேற்று மதியம் ஒரு மணி அளவில் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே வந்து குழந்தையை பார்த்த போது சிறுவன் காணவில்லை. உடனே அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் காணாமல் போனது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சிறுவன் காணாமல் போன இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்லாவரம் துணை காவல் ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் காணாமல் போன சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு புகைப்படங்களை அனுப்பி வைத்து சிறுவனை பார்த்தவுடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்பிறகு சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு வாட்சப்பில் வந்த தகவலை பார்த்து காணாமல் போன சிறுவன் அவரிடம் இருப்பதாக கூறியுள்ளார். விரைந்து சென்ற போலீசார் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பல்லாவரம் உதவி ஆணையாளரின் துரித நடவடிக்கையால் வாட்ஸ்அப் மூலம் காணாமல் போன குழந்தையை கண்டுபிடித்து ஐந்து மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. காணாமல் போன சிறுவனை விரைந்து கண்டுபித்த பல்லாவரம் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.