திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : அரசு அதிகாரி காரில் இருந்து முக்கிய ஆவணம் பறிமுதல்!!

 


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகர பொறியாளர்கள் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் மாநகர பொறியாளர்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் மாநகராட்சி பகுதிகளில் செய்ல்படக் கூடிய புதிய பைப்லைன் அமைத்தல், புதிய கட்டிடங்களுக்கு வரைபடம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் டெண்டர் கொடுப்பது மற்றும் முடிந்த வேலைகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி பொறியாளர்கள் பிரிவு சாமிநாதன், மாரியப்பன் ஆகியோரின் அலுவலக பிரிவில் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொறியாளர்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு காரில் இருந்த ஆவணங்களை போலீசாரால் எடுத்து சென்றனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக பொறியாளர் பிரிவு உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை காரணமாக மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.