ஐஐடிக்கு குறி.. பீட்டர் அல்போன்சை சந்தித்த அன்சாரி.. மீண்டும் பற்றி எரிகிறது பாத்திமா மரணம்.
சென்னை IITயில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த மாணவி கடந்த 2019 ஆம் ஆண்டு திடிரென தற்கொலை செய்தது தமிழகம் மற்றும் கேரளாவை உலுக்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளும், பெரியாரிய அமைப்புகளும், SF1, மாணவர் இந்தியா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தின. பிறகு வழக்கம் போல அது கடந்து மறந்து விட்டது.
இந்த நிலையில் IIT யில் மீண்டும் சாதிய மேலாதிக்கம் நீடிப்பதாகவும், அங்கு BC, MBC, சமூகங்கள்,தலித் மற்றும் பழங்குடி சமூகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் வஞ்சிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன.இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று, சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸை இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது பாத்திமாவின் மர்ம மரணம் குறித்து ஆணையம் தலையிட்டு உண்மையை கொண்டு வர வேண்டும் என்றும், அங்கு நிலவும் சாதி, மத பாகுபாடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதனால் சென்னை IIT க்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் சமூக நீதியாளர்களின் கவனம் மீண்டும் அதை நோக்கி திரும்பியிருக்கிறது. IIT யில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் ஏகபோக ஆதிக்கம் முடிவுக்கு வந்து , அமைதியான சூழலில் அங்கு சமூக நீதியும், சமத்துவ கற்றலும் ஏற்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது என மாஜக பொதுச் செயலாளர் அன்சாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.