வழக்கு: பறிமுதல் செய்து 5 ஆண்டுகள்... எங்கே சயனின் மொபைல் போன்கள்? முறையிட முடிவு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறிய மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் காவல் துறையினர் அடுத்தடுத்து மறுவிசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை நேற்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்னர் வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 2 ம் தேதி நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்தார். இவ்வழக்கில் சாட்சிய விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜாகோபால், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர் மற்றும் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி வருகின்ற செப்டம்பர் 2 ம் தேதி முதல் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை முடிந்த பின் வெளியே வந்த சயன், அங்கிருந்த டிஎஸ்பி. சுரேஷிடம், விசாரணையின் போது தன்னிடம் இருந்த பெறப்பட்ட ஐபோன் உள்ளிட்ட 3 போன்களை தருமாறு கேட்டார். ஆனால் போலீசார் அதற்கு ஒருவரை ஒருவர் பார்த்தனர். போன் யாரிடம் இருந்தது என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. இதை கண்டு எரிச்சலான சயன், ‛எனது போனை கொடுங்கள்..’ கடுப்பானார். ‛நீதிமன்றத்திலும் அதை ஆஜர்படுத்தவில்லை... என்னிடமும் தரவில்லை... வேறு எங்கு தான் வைத்திருக்கிறீர்கள்,’ என சயன் கேட்க, போலீசார் பதில் சொல்ல முடியாமல் நின்றனர். ஒரு கட்டத்தில் செல்போன் கோரிக்கை, வாக்குவாதமாக மாறியது. பின்னர் செப்டம்பர் 2 ம் தேதி செல்போன்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனில், செல்போன்கள் தொடர்பாக நீதிபதியிடம் முறையிட உள்ளதாக சயன் கூறிச் சென்றார்.
2017 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சயனிடம் இருந்து ஒரு ஐபோன் மற்றும் இரண்டு ஆண்ட்ராய்ட் போன், 3 சிம் கார்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றை காவல் துறையினர் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கவில்லை. சயனிடமும் கொடுக்கவில்லை. அதேசமயம் அந்த செல்போனில் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் பேசிய அழைப்புகள், புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கைப்பற்றப்பட்ட இந்த செல்போன்களில் உள்ள ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா அல்லது மறைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் செல்போன்கள் சமர்பிக்கப்பட்டு, அதில் உள்ள ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினால் வழக்கில் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வழக்கு விசாரணையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் சயனின் செல்போன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.