ஹெலிகாப்டர் பிரதர்ஸுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் : நிதிநிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

 


கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி தனிப்படை டி.எஸ்.பி அசோகன் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்காக குற்றவாளிகளான எம்.ஆர் கணேஷ் மற்றும் எம்.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

மனுவை விசாரணை செய்த நீதிபதி பாண்டிமகராஜன் நாளை 10-ந் தேதி முதல் 13-ம் தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.