ரேஷன் கார்டு பெற முடியாது.. 300 ரூபாய் முதல் 3000 வரை செலவாகிறது - ஸ்மார்ட்டா கல்லா கட்டும் அரசு அதிகாரிகள்... புலம்பும் சாமானியர்கள்


 புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் 15 நாள்களில் கிடைக்கும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து தாலுகா அலுவலகத்துக்கும் இசேவை மையத்துக்கும் நடையாய் நடக்கும் பொதுமக்களின் காதுகளுக்கு இந்த அறிவிப்பு தேனாய் பாய்ந்தது. அறிவிப்பு வேண்டுமானால் அரசு கொடுக்கலாம் பணிகளை செய்வது யார் அதிகாரிகள் தானே. 15 நாள்களில் ரேஷன் கார்டு கைக்கு வருவது சாத்தியமா என்பது குறித்து பிறகு பார்க்கலாம். இந்த ரேஷன் கார்டு விவகாரத்தில் கல்லா கட்டும் அதிகாரிகள் குறித்து வெளியாகும் தகவலுக்கு இப்போது செவிசாயுங்கள். என்ன சார் எல்லாம் ஆன்லைன்ல நடக்குது இப்போ போய் அதிகாரிகள் கல்லா கட்டுறாங்கன்னு கதையளக்காதீங்கன்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல பேசுறது சத்தமாவே கேக்குது. விவரமாவே சொல்றோம் கேளுங்க.

ஆன்லைன் விண்ணப்பம்


உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்க விவரம் தெரிஞ்சவராக இருந்தா உங்க மொபைல் போனில்  ஈஸியா விண்ணப்பிக்கலாம். அதேபோல் இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தனியார் இண்டர்நெட் செண்டருக்கு சென்று சில நூறுகளை கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். எனக்கு விவரம் தெரியும் நான் ஆன்லைனில் விண்ணப்பம் பூர்த்தி செய்துவிட்டேன். நான் பதிவு செய்த தகவல் சரியா இருக்கவும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுன்னு எனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்துடுச்சு. இப்ப என்ன இன்னும் 15-நாள் கழிச்சு ரேஷன் கார்டு வரப்போகுதுன்னு கேட்குறீங்களா.

விண்ணப்பத்தின் நிலை?

உங்க மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அப்படின்னு ஒரு மெசேஜ் வந்திருக்கும். அந்த எண்ணை கொண்டு ரேஷன்கார்டுக்கு பதிவு செய்த விண்ணப்பத்தின் நிலை என்னவென்று தெரிஞ்சுக்கலாம். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டுவிட்டது ஒரு டிக் அடித்திருக்கும். ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என 4 நிலை இருக்கும். நீங்க ஆவணங்களை சரியாக சமர்ப்பித்திருந்தால் விண்ணப்பம் அடுத்த நிலைக்கு செல்லும் இல்லையென்றால் நிராகரிக்கப்படும். அதற்காக காரணம் மெசேஜ் மூலம் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலை

துறை சரிபார்ப்பு நிலையில் அதிகாரி உங்களை அழைத்து ஆவணங்களை சரிபார்த்து அதனை உறுதி செய்வார். தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதலுக்கு பிறகு உங்களுக்கு ரேஷன் கார்டு கைக்கு வந்து சேரும். இந்த முறையில் நீங்களும் அதிகாரியும் நேரடி தொடர்பில் இருப்பீர்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. இந்த நடைமுறையிலும் ரேஷன் கார்டு கைக்கு வர 300 ரூபாய் முதல் 500 வரை அதிகாரிகளுக்கு அழ வேண்டி இருக்கு என விண்ணப்பித்தவர்கள் வசைப்பாடுகின்றனர். இந்த 300 ரூபாய்க்கா இவ்ளோ நேரம் மூச்சப்போட்டிங்கன்னு கேட்கும் தாராள பிரபுவாக நீங்க இருந்தால் உங்கள் கேள்விக்கான பதில் கீழே இருக்கு.

இண்டர்நெட் செண்டர்களின் சேவை

நம்மூரில் சாதாரண பட்டன் போனில் நம்பர் எடுத்து போன் பேசத் தெரியாத நபர்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள். மொபைல் போனை அக்குவேறு ஆணிவேராக பிரிக்கக்கூடிய 90-ஸ், 2கே கிட்ஸ்களுக்கு எல்லாம் எங்க இந்த வேலை செய்ய நேரம் இருக்கு. வீட்ல பெரியவங்க உதவின்னு கேட்டால்கூட எனக்கு எல்லாம் தெரியாது நான் எதாவது பண்ணி வரலன்னா நீ என்னத்தான் சொல்வேன்னு இண்டர்நெட் செண்டருக்கு போங்கன்னு வழிக்காட்டுறாங்க. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்ய, பட்டா, சிட்டா பெயர் மாற்றம் செய்ய எங்களை அணுகவும்ன்னு எப்படியும் ஊருக்கு நாலு தனியார் இண்டர்நெட் செண்டர் இருக்கும்.

ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணனும் சொன்னதும் நம்மை வரவேற்கும் அந்த செண்டரை சேர்ந்தவர்கள் விண்ணப்பத்துக்காக நம்முடைய விவரத்தை கேட்பதை போல் நம்மைப்பற்றி தெரிந்து கொள்வார்கள். இதுக்காக நீங்க இவ்ளோ தூரம் வேலையை விட்டு வரனும்ங்களா. ஒரு 3000 கொடுத்துட்டு போங்க எல்லா வேலையும் முடிச்சு ரேஷன் கார்ட் நான் கையில வாங்கித்தர்றேன். (குறிப்பு: தாலுக்கா அலுவலகங்கள் அருகே நிறைய கடைகள் இதுபோன்று இயங்கிக்கொண்டிருக்கின்றன) நீங்க உங்க வேலையை விட்டுட்டு ஏன் அலையுறீங்க எல்லாம் நமக்கு தெரிஞ்ச ஆபிஸர்தான். கடை இங்கதான் இருக்குது நான் இங்கத்தான் இருப்பேன். இங்க பாருங்கன்னு ஏற்கனவே கையில் வைத்திருக்கும் சில கார்டுகளை காண்பிப்பார்கள்.

கல்லா கட்டும்  அதிகாரிகள்

அவர்களும் ஆமாம் தம்பி இன்னைக்கு கூட வேலையை விட்டுட்டுதான் வந்தேன். காசுதான் கொஞ்சம் கூட கேட்குறீங்க கொஞ்சம் பார்த்து சொல்லுங்கன்னு சொன்னதும். அந்த கடைக்காரர் சரிங்க உங்களுக்காக பண்றேன் ஒரு 2500 ரூபாய் மட்டும் கொடுத்துட்டு போங்கன்னு சொல்வார். இதுல கடைக்காரர் ஒரு பங்கு எடுத்தது போங்க மீதி பணம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பாக்கெட்டுக்கு போவதாக சொல்லப்படுகிறது. விண்ணப்ப எண் மொத்தமாக அதிகாரிகளுக்கு சென்றடைய அவர்களும் அந்த விண்ணப்பத்தை சத்தம் இல்லாமல் க்ளியர் செய்வதாக தெரிகிறது. இதுகுறித்து யாரும் பெரிய அளவில் புகார் கொடுக்காததால் சத்தம் இல்லாமல் இந்த கமிஷன் விவகாரம் தொடர்ந்து வருகிறது.

ரேஷன் கார்டு இன்னும் வரலைன்னு போய் கேட்டால் எல்லாம் ஆன்லைன் சார் நாங்க என்ன பண்ண முடியும். சென்னைக்கு அனுப்பியிருக்கோம் வந்தா தரப்போறோம். நாங்க வெச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறோம்ன்னு அதிகாரிகள் அழகாக பதில் தருகின்றனர். சரி இப்படி நீண்ட காத்திருப்புக்கு பின் குடும்ப அட்டைகள் கைக்கு வந்தாலும் அவற்றுக்கு பொருட்களை வழங்குவது ஒரு மாதத்துக்கு மேல் காலதாமதம் ஆகிறது. ஆன்லைன் அப்ரூவல் ஆகவில்லை என ரேஷன் கடைகளில் மக்களை அலைய விடுகிறார்கள். இப்படி அலைய விடுவதற்கு பதிலாக கார்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே என பல ரேஷன் கடைகளில் மக்கள் புலம்புவதை நேரடியாக பார்க்க முடிகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்