ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2.63 லட்சம் கடன் : தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு

 


தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது நிதிநிலை மோசமாக இருந்ததாகவும், கடன் அதிகளவு வாங்கப்பட்டிருப்பதாகவும் அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. மேலும், திமுக ஆட்சியமைந்தால் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆட்சியமைந்து 100 நாட்களை நெருங்க உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் என அவர் அறிவித்தார்.

இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடைசியாக 2001ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து கடைசியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போதைய வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அரசுக்கு வரவேண்டிய வருமானம் பலமடங்கு சரிந்துள்ளது. வருமானம் சரிந்து இருப்பதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. தமிழக அரசுக்கான வருமானம் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக ஏற்பட்டது.

தமிழக அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பது முக்கிய பிரச்சனையாகியுள்ளது. 2020-21ல் மட்டும் ரூ.61,320 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 கடன் உள்ளது, எனக் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்