திமுக நிர்வாகி மீது நிலஅபகரிப்பு வழக்கு : ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அபகரித்துக் கொண்டதாக புகார்…!!
காஞ்சிபுரம் : அரசின் அனுமதி பெறாமல் சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்த திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ராயன்குட்டை பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சேகர் (49) என்பவர் டிராவல்ஸ் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- சீனிவாசனிடம் கடந்த 2019ல், கோடி ரூபாயில் இரண்டு சீட்டும், 50லட்சம், 25 லட்சம் 10லட்சம், 3 லட்சம் ரூபாய் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு சீட்டு கட்டி வந்தேன். அதற்கான சுயூரிட்டியாக களியனுாரில் உள்ள ஐந்து சொத்துக்கள், பாக பிரிவினை பத்திரம் என, 2 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை கார்த்திக் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தேன்.
அதன் பின், 1 கோடி ரூபாய் மதிப்புடைய சீட்டை எடுத்தேன். இந்நிலையில், நான் கட்டி வந்த மற்ற சீட்டுகளை திடீரென ரத்து செய்துவிட்டனர். ரத்து செய்யப்பட்ட சீட்டுகளில் கட்டிய தொகையான 38.50 லட்சம் ரூபாயை தரவில்லை. தவிர, சுயூரிட்டிக்காக நான் எழுதி கொடுத்த 2 கோடி ரூபாய் சொத்துகளை, கார்த்திக் சரவணபெருமாளுக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். என்னுடைய 38.50 லட்சம் ரூபாய், 2 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அபகரித்து கொண்டனர். திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர், எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார், திமுக தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரான சீனிவாசன் மீது அதிக அளவில் வட்டிக்கு பணம் கொடுத்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.