பெண்கள் குடும்ப தலைவியாக இருந்தால் மட்டுமே மாதம் 1000 ரூபாய் நிதி கிடைக்குமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கான மாத தொகையை பெற ரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்ற வேண்டுமா என்பது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இதற்கிடையே, பெண்கள் குடும்ப தலைவியாக இருந்தால் மட்டுமே இந்த நிதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவத் தொடங்கியது.
இதையடுத்து, பெண்கள் பலரும் ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர் என்பதில் இருந்து தங்கள் கணவரின் பெயரை நீக்கிவிட்டு தங்கள் பெயரை சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக உணவு மற்றும் உணவு வழக்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மாவட்ட வாரியாக துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் கொண்டு கூட்டம் நடத்த முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் 21 மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ளதாகவும் ஆய்வு கூட்டம் நடந்த பிறகு நேரடியாக ரேஷன் கடை நெல் கிடங்கு உள்ளிட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் கூறினார்.
குடும்ப அட்டை- லஞ்சம் பெற்றால் நடவடிக்கை
மேலும், ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கிய இரண்டு தனியார் அரிசி ஆலை தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குடும்ப அட்டை வழங்க லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அமைச்சர் சக்கரபாணி, 1000 ரூபாய் நிதியை பெற ரேசன் கார்டுகளில் பெண்கள் குடும்ப தலைவராக மாற்ற வேண்டுமா என்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.