தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறப்பு!
தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ள நிலையில், பல முக்கிய திருத்தலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு, பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோயில்களில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. கோயில்களில் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த தளர்வில் கோயில்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டன.
அதன்படி, கடந்த வாரம் சில மாவட்டங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. கடந்த 2ஆம் தேதி தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தளர்வுகளின்படி, தமிழ்நாட்டில் நாளை முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட உள்ளது. இதனால், தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.