பக்ரீத் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு வந்த போது சோகம்!!!
பக்ரீத் விடுமுறைக்காக விருந்துக்கு வந்த உறவினரின் 13 வயது மகன் எதிர்பாராதவிதமாக மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷாஜகான் மும்தாஜ் தம்பதியினர். இவர்களது தங்கை முபீனா திருப்பூரில் வசித்து வரக் கூடிய சூழ்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது தன் சகோதரரின் 2 மகள் மற்றும் மகன் அல்சாபித் ஆகியோரை திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் முபினாவின் வீட்டு மாடியில் சிறுவர்-சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டு மாடிக்கு அருகாமையில் மிகத் தாழ்வான நிலையில் சென்றிருந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக அல்சாபித் தொட்டுவிட்ட நிலையில் உடனடியாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து மிக கவலைக்கிடமானார்.
உடனடியாக உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோம்பை தோட்டம் பகுதியில் மிக தாழ்வான நிலையில் மின்கம்பம் செல்வதால் ஏற்கனவே இரண்டு பேருக்கு மின்சாரம் பாய்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மின்சார வாரியம் கவனத்தில் கொண்டு தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.