கண்ணகி நகர் பசங்க உன்னை தீர்த்து கட்டிவிடுவார்கள் என உதவி ஆய்வாளர் மிரட்டுவதாக நடிகை புகார்!!

 
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவரும் காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

ராதாவுக்கு யாராவது செல்போனில் அழைப்பு விடுத்தாலோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பினாலோ சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு ஏற்படும். பின்னர் வசந்த ராஜா நடிகை ராதாவை அடிக்கடி, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் கண்ணகி நகரில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் தனக்கு தெரிந்தவர்கள் என்றும் 500 ரூபாய் கொடுத்தால் உன்னை தீர்த்துக்கட்டி விடுவார்கள் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்  கடந்த ஏப்ரல்14ம் தேதி புகார் செய்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். நடிகை ராதா மற்றும் உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவிடம் விசாரணை செய்த உதவி ஆய்வாளர் பெண் உதவி ஆய்வாளர் பாரதி, உதவி ஆய்வாளர் இளம்பரிதி ஆகியோர் வசந்த ராஜாவின் எதிர்காலம் பாழாகிவிடும்.எனவே இருவரின் நலன்கருதி இணைந்து வாழுங்கள் என அறிவுரை கூறினர்.

இதையடுத்து மனம் மாறி ராதா கொடுத்த புகாரை வாபஸ் பெற்றதாகவும். ஆனால் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்தபடி வசந்த ராஜா என்னுடன் சேர்ந்து வாழவில்லை. காவல் நிலையத்தில் வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதத்தையும் உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி ஆகிய இருவரும் மறைத்து விட்டனர்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதை அறிந்து கொண்ட நடிகை ராதா தான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுபற்றி வசந்த ராஜாவிடம் கேட்டபோது, அவர் கொலை செய்து விடுவேன் என ராதாவை மீண்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் நரேந்திரன் நாயரிடம் ராதா கடந்த 2 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அதில் தன்னுடன் சேர்ந்து வாழ்வதாக ஏமாற்றிய உதவி ஆய்வாளர் வசந்தராஜா, அவருக்கு உடந்தையாக இருந்த உதவி ஆய்வாளர்கள் பாரதி இளம்பரிதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.

அவர்களை இதுதொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர். 11:30 மணியிலிருந்து சுமார் 2 30 மணி வரை மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் மீண்டும் பாதிக்கப்பட்ட முழு விவரங்கள் புகாராக பெறப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ராதா, தான் நம்பி ஏமாந்து விட்டதாகவும்,  வசந்த ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் வசந்த ராஜைவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.