அவதூறு வழக்குகள் ரத்து - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

 அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு


வழக்குகளை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான சுமார் 130 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுமென முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, விஜயகாந்த், பிரேமலதா, ஈவிகேஸ் இளங்கோவன், நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், திமுகவைச் சேர்ந்த கே.என்.நேரு, நாசர், கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மீதான அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. அறப்போர் ஜெயராமன், கணேசன் ஆகியோர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் 
ஜெயராம் வெங்கடேசன், கணேசன், (RSYF), திராவிட முன்னேற்றக் கழகத்தின் கே.என்.நேரு மற்றும் எஸ்.எம்.நாசர், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.கே.கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ். பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.