பெட்ரோல் பங்கில் டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியை காட்டி மிரட்டல்!
சென்னை நெசப்பாக்கம் திருவள்ளுவர் சாலையில் ARG இந்தியன் ஆயில் டீலர் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்றிரவு 10.50 மணி அளவில் அதிமுக கொடி கட்டிய இனோவா காரில் நான்கு நபர்கள் வந்துள்ளனர்.
அங்கு பணியில் இருந்த பெட்ரோல் பங்கின் கேஷியர் மணி என்பவரிடம் ரூபாய் ஆயிரத்துக்கு டீசல் போடுமாறு கூறியுள்ளனர். டீசல் போட்டுவிட்டு ஊழியர் பணம் கேட்டதற்கு தாங்கள் அதிமுக நிர்வாகிகள் என்று அதனால் பணம் தர முடியாது என்றும் கூறியுள்ளனர். இதனால் ஊழியர் மணி அவர்களை தடுக்க அருகிலிருந்த வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து காரில் வந்தவர்களிடம் பணம் தருமாறு கூறியுள்ளனர்.
இந்தநிலையில் காரினுள் இருந்த ஒரு நபர் பெட்ரோல் பங்க் ஊழியர் மணி மற்றும் மற்ற வாடிக்கையாளர்களை கத்தியை எடுத்துக் காட்டி தங்களை தடுக்க முற்பட்டால் கத்தியால் குத்தி விடுவதாக கூறியுள்ளார்.
பின்பு வாடிக்கையாளர் ஒருவர் காரின் முன்பு சென்று காரை தடுக்க முற்பட்டபோது, அவரை காரால் சில அடிதூரம் வரை தள்ளி சென்று காரை எடுத்துக்கொண்டு அதிமுக கொடி கட்டிய இனோவா காரில் வந்த அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் கேஷியர் மணி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதிமுக கொடி கட்டிய காரில் வந்து ரூ.1000 க்கு டீசல் போட்டுவிட்டு கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.