தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள்… கானல் நீராகும் அமமுக..!!
அண்மையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அமமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏக்கள், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், டேவிட் செல்வன் உள்ளிட்ட 20 பேர் கடந்த வாரம் திமுகவில் இணைந்த நிலையில், டிடிவி தினகரனின் வலது கரம் போல இருந்த பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் திமுகவில் இணைந்தது பல்வேறு கேள்விகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் அமமுக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அக்கட்சியின் நிர்வாகிகள் அதிமுகவிலும், திமுகவிலும் இணைந்து வருகின்றனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
ஏற்கனவே, அமமுக நிர்வாகிகள் மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவிற்கு திரும்பினால் சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்.
இந்த சம்பவங்கள் ஒருபுறம் நடந்து வந்தாலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைதியாகவே இருந்து வருகிறார். எதைச் சொல்லி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை கொடுப்பது என்பது புரியாமல் இருந்து வருகிறார்.
சசிகலா ஒருபுறம் ஆடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வந்தாலும், தினகரனின் இந்த அமைதி தொடர்ந்தால், விரைவில் அமமுக கூடாரம் காலியாகி விடும் என்பது நிதர்சனமான உண்மை.
இது தொடர்பாக அமமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில்,” தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி நிர்வாகிகளின் கூட்டமாவது நடத்தியிருக்கலாம். தேர்தலில் தோல்விக்கு காரணம் எங்களின் தலைவர்கள் அமமுகவிற்கு வாக்கு சேகரிப்பதற்கு பதிலாக, திமுகவுக்கு வாக்கு சேகரித்ததுதான். காரணம், அதிமுக தோல்வியடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.
கடந்த இரு தேர்தல்களிலும் சொந்தப் பணத்தை வாரி இறைத்த கட்சி வேட்பாளர்களுக்கு மேற்கொண்டு செலவழிக்க முடியாத நிலை. எனவே, அவர்கள் மாற்றுக் கட்சியை தேடிச் செல்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் தலைவர் தினகரன் இறங்கி வேலை செய்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும்,” என்றார்.