கழுத்தை அறுத்துக் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் - உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் !

 


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் அரசு மருத்துவமனை அருகே இளைஞர் ஒருவர் தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். பின்னர் உடைந்த கண்ணாடி துண்டை எடுத்து திடீரென தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அங்கிருந்த மக்கள் பதற்றமடைந்தனர்.

பிறகு ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநனராக பணியாற்றும் இளைஞர்கள் காவல்துறையுடன் இணைந்து போராடி அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தனர்.

அப்போது, அந்த இளைஞர், எனக்குச் சிகிச்சை அளிக்க வேண்டாம் நான் சாக விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள் என மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்.

பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அந்த இளைஞரை சமாதானப்படுத்தி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கச் செய்தனர்.


மேலும் கழுத்து அறுத்துக் கொண்ட இளைஞரை மருத்துவமனையில் சேர்க்கப்படாமல் சிறிது நேரம் தாமதப்படுத்தி இருந்தால்கூட அவர் உயிர் பிரிந்திருக்கும். அவரை உடனே அழைத்து வந்தால் அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து போலிஸார் கழுத்து அறுத்துக் கொண்ட இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்தானா அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.