மணல் கடத்தலை பிடித்த போலீசாருக்கு மிரட்டல்… கடவூர் செல்வராஜ் மீது திமுகவினர் அதிருப்தி..!!
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானவுடன் போலீசாரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட கடவூர் செல்வராஜ் ஆதரவாளர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவில் போட்டியிட்டு ஜெயித்தவர் கடவூர் செல்வராஜ், இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இவருடைய ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
இணைந்ததிலிருந்து, இவர் திமுக நிர்வாகிகளை மதிக்காமல் ஆங்காங்கே கிராமம் கிராமமாக கூட்டம் போட்டு வந்த நிலையில், இவரை திமுகவினரும், பொதுமக்களும் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திருப்பி அனுப்பிய காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார். அதாவது, கடவூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பாடி குளத்தில், சரவணா சேம்பர்ஸ் என்ற செங்கல் சூளை நிறுவனம் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மண் திருடியுள்ளனர். இரண்டு லாரிகளில் மண் திருடியதை பாலவிடுதி போலீசார் தீவிர ரோந்து பணியின் போது கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
தற்போது, திடீரென அதிமுகவில் ஐக்கியம் ஆகியுள்ள கடவூர் செல்வராஜ் அவருடைய ஆதரவாளர் பிச்சை, காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எப்ஐஆர் போட கூடாது, உடனே லாரியை அனுப்பி விடுங்கள் என்று கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். மேலும், மண் கடத்தல் எதுவும் இல்லை என்று கூறி அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திடீரென்று அதிமுகவிலிருந்து திமுகவுக்கு மாறிய, ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் கடவூர் ஒன்றிய திமுகவிற்கு பெரிய கலக்கத்தினை ஏற்படுத்தி வருவதோடு, ஒட்டுமொத்த திமுகவிற்கும் கெட்டபெயர் ஏற்படுத்தும் செயல் பொதுமக்களிடையேயும், திமுகவினரிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆகவே திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து, கடவூர் ஒன்றிய திமுகவில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.