குழந்தை விற்ற விவகாரம் - தலைமறைவான அறக்கட்டளை நிர்வாகி சிவக்குமார் கைது

 


மதுரை இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார் தமிழக - கேரள எல்லையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்படும் இதயம் என்ற தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்பவருடைய ஒரு வயது ஆண் குழந்தை வளர்க்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் குழந்தை அண்மையில் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும் முறைப்படி ஆவணங்களை பெற்றுக்கொண்டு மயானத்தில் உடலை அடக்கம் செய்ததாகவும் உறவினர்களிடம் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குழந்தையின் குடும்பத்தினர் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், மதுரையில் கடந்த சில நாட்களாக எந்த குழந்தையும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது. இதற்கிடையே இதயம் காப்பகத்தில் இருந்த 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், ஒரு வயது ஆண் குழந்தையை மதுரை இஸ்மாயில்புரத்தில் நகைக்கடை வைத்துள்ள, கண்ணந்பவானி தம்பதிக்கு 5 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது. மற்றொரு பெண் குழந்தையை கருப்பாயூரணி கல்மேடு பகுதியை சேர்ந்த சகுபார் சாதிக் - அனீஷ் தம்பதிக்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தல்லாகுளம் போலீசார் இரு குழந்தைகளையும் மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளை வாங்கிய நபர்களிடம் விசாரணை நடந்தது. பச்சிளம் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த விவகாரத்தில் காப்பக உரிமையாளர் கலைவாணி, இரண்டு இடை தரகர்கள், இரண்டு தம்பதிகள் என மொத்தம் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

குழந்தைகளை விற்ற விவகாரத்தில் முக்கிய நபர்களாக கருத்தப்படும் சிவக்குமார், மாதர்சா தொடர்ந்து தலைமறைவானதால் அவர்களை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக கேரள எல்லையில் மதுரை இதயம் அறக்கட்டளை நிர்வாகி, சிவகுமார் மற்றும் பெண் நிர்வாகி மாதர் ஷா இருவரும் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்