ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு : தமிழக அரசு உத்தரவு
இணையவழியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் நேற்று திருவள்ளூரில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்கப் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், அந்தந்தக் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் புகார்ப் பதிவேடு வைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள்.
இதனால் புகாரை உடனடியாக தெரிவிக்கவும் அதன் மீது தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்றும் கூறினார்கள். இதன் முழுப்பரிமாணத்தையும் ஆய்ந்து ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையுடன் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் புகார்ப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை உடனடியாக அமல்படுத்த ஆணையாளர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.