குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

 


கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(வயது 70 ) சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டை அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக உளுந்தூர்பேட்டை பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.  அப்போது சின்னப்பொண்ணு தனது அருகில் இருந்த மர்ம பெண் உள்பட 3 பேரிடம் குணமங்கலத்துக்கு செல்லக்கூடிய பஸ் எப்போது வரும் என கேட்டார். அதற்கு தற்போது அந்த ஊருக்கு பஸ் இ்ல்லை. தங்களுடன் காரில் வந்தால் இறக்கி விடுவதாக அவர்கள் கூறினர். 

இதை உண்மை என்று நம்பிய சின்னப்பொண்ணு அவர்களுடன் காரில் வர சம்மதித்தார். இதையடுத்து மர்ம பெண் உள்பட 4 பேரும் காரில் புறப்பட்டனர். அப்போது வழியில் சின்னப்பொண்ணுக்கு, மிரண்டா வேண்டுமா எனக்கேட்டுள்ளனர். லிப்ட் கொடுத்து, மிரண்டாவும் கொடுக்குறாங்களே... என, அதை வாங்கிக் குடித்த அவர், சிறிது நேரத்திலேயே ரைட் சைடு சாய... லெப்ட் சைடில் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலி, தோடு ஆகியவற்றை பறித்த மர்ம நபர்கள் மயங்கிய நிலையில் இருந்த சின்னப்பொண்ணுவை உளுந்தூர்பேட்டை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள பல்லவாடி காட்டுப்பகுதியில்  தள்ளிவிட்டு  அங்கிருந்து சென்று விட்டனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை மயக்கம் தெளிந்து எழுந்த சின்னப்பொண்ணு தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி மற்றும் தோடு ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னரே காரில் தன்னை கடத்தி வந்த மர்மநபர்கள் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை பறித்துச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னப்பொண்ணு கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து மூதாட்டியை கடத்தி சென்று நகையை பறித்துச் சென்ற மர்ம பெண் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியை காரில் கடத்தி சென்று குளிர்பானத்தில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை பறித்துச்சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  பேருந்து நிலையம் சாலையோரம் போன்ற பகுதிகளில் தனிமையில் நிற்பவர்களை கண்காணித்து அவர்களிடம் எந்த ஊருக்கு போக வேண்டுமென கேட்டு தனது காரில் ஏற்றிச் சென்று பாதி வழியில் நிறுத்தி கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிப்பது மற்றும் குளிர்பானத்தில் மயக்க மருந்து போன்றவற்றை கலந்து கொடுத்து நகை பறிப்பு போன்ற சம்பவங்களில் டிப்டாப் ஆசாமிகள் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிக்க உள்ளதாக கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் பொதுமக்கள் மற்றவர்களிடம் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.