பிகில் படத்தை போட்டுக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.. சென்னை அரசு மருத்துவமனையில் ருசிகர சம்பவம்

 


விபத்தில் காயமடைந்து வலியால் துடித்த சிறுவனுக்கு நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை போட்டுக்காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பிளாக்பஸ்டர் நாயகனான நடிகர் விஜய்-க்கு சிறுவர் முதல் முதியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களை கடந்து இக்கால சிறுவர்களும் விஜயை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கி ரத்த காயங்களுடன் போராடிய சிறுவன், ஊசி போட்டுக்கொள்ளவே அஞ்சிய நிலையில் அவரை சமாதானப்படுத்துவதற்காக அவருக்கு பிடித்தமான நடிகர் விஜயின் பிகில் படத்தை போட்டுக்காட்டி மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சசிவர்ஷன், தன்னுடைய மாமா அரவிந்த் என்பவருடன் கடந்த செவ்வாயன்று இரவில் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.

அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் இவர்கள் சென்றுகொண்டிருந்த போது பின்சீட்டில் அமர்ந்திருந்த சிறுவன் சசிவர்ஷன் தூக்கக்கலக்கத்தில் சாலையில் தவறி விழுந்துள்ளான். கீழே விழுந்ததில் நெற்றி, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்

நெற்றியில் பலத்த காயம் இருந்ததால் அவருக்கு தையல் போட மருத்துவர்கள் முடிவு செய்து முதலில் ஊசி போட முயன்றனர். ஆனால் பயத்தில் ஊசி வேண்டாம் என அவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மறுத்துள்ளான். எவ்வளவு முயன்றும் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவன் ஒத்துவராததால் மருத்துவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கினர்.

அப்போது அங்கு இரவுப் பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். உனக்கு என்ன பிடிக்கும் என தன்னார்வலர் ஜின்னா கேட்டதற்கு எனக்கு நடிகர் விஜயை ரொம்பப் பிடிக்கும் எனவும் அவருடைய தீவிர ரசிகர் எனவும் சிறுவன் சசிவர்ஷன் கூறியுள்ளான். மேலும் வலியை மறந்து விஜய் குறித்து தொடர்ந்து சிறுவன் அவரிடம் பேசியிருக்கிறான்.

இதனையடுத்து, செல்போனில் வைத்திருந்த நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்திருக்கிறார் ஜின்னா. வலியை மறந்த சிறுவன் மெய் மறந்து பிகில் படம் பார்த்துக்கொண்டிருந்த போது ஊசி போட்டு அதன் பின்னர் தையல் போட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க நடிகர் விஜய்யின் பிகில் படத்தை போட்டுக் காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்களும் சந்தோஷமடைந்துள்ளனர்.