போக்சோ சட்டத்தில் கைதான பாஜக பிரமுகரின் மகன்கள் புகார் கொடுத்தவரை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11ஆம் தேதி 5க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாஜகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் (60) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்காக புகார் அளித்த பெற்றோர் பாண்டியராஜன் இன்று காலை சென்றுள்ளார். பின்பு  மகாலிங்கம் மீது   புகார் கொடுத்ததற்காக மகாலிங்கம் குடும்பத்தினர்  தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அவர் வசித்துவந்த பகுதி குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்டது என்பதால் புகாரினை குத்தாலம் காவல் நிலையத்தில் அளிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர். 


இந்நிலையில் இன்று விரைவு இரவு  தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பாண்டியராஜன் மீது மறைவாக நின்று கொண்டிருந்த மகாலிங்கத்தின் மகன்களான ஜவகர் மற்றும் சுதாகர் 10 க்கும் மேற்பட்டோருடன் இணைந்து  பாண்டியராஜனை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் தடுக்கச் சென்ற சத்யராஜ் என்பவரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர். மேலும் சிலரை கட்டையால் அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடனடியாக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்‌ ஜவஹரை அங்கிருந்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக பிரமுகர் மீது புகார் கொடுத்ததற்காக சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது