ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மகன் தற்கொலை..!

 


சென்னையில் கிண்டியில் அமைந்துள்ளது இந்திய தொழில்நுட்ப கழகம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி.யும் ஒன்றாகும். இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் அமைந்துள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டு அதிகாரி டாக்டர் ராஜூ என்பவர் நேற்று சக விளையாட்டு வீரர்களுடன் வந்தார். அப்போது விளையாட்டு மைதானத்தில் பாதி எறிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக, அவர்கள் இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கருகிய நிலையில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் நாயர் என்பது தெரிந்தது. 22 வயதான அவர் சென்னை வேளச்சேரியில் உள்ள லதா தெருவில் வசித்து வந்துள்ளார். 

இவர் கேரளாவில் பி.டெக். படிப்பை முடித்து கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவர்களுக்கு ப்ராஜெக்ட் அசோசியட்டாக இருப்பதாகவும் வேளச்சேரியில் தங்கி இருந்து ஐ.ஐ.டி.க்கு வந்து செல்வதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும் அதன் மூலம் வருவாய் ஈட்டிவந்துள்ளார். இவரது தந்தை ரகு இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். வேளச்சேரியில் தங்கி இருந்த உன்னி கிருஷ்ணனுடன் 3 ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் உன்னிகிருஷ்ணன் புராஜெக்ட் பணிகளை செய்து கொடுத்து வந்துள்ளார்.Suicide In IIT | ”என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை” - ஐஐடி வளாகத்தில் இஸ்ரோ விஞ்ஞானி மகன் தற்கொலை..!


எரிந்த நிலையில் கிடந்த உன்னிகிருஷ்ணனின் உடல் அருகில் அவரது தற்கொலை கடிதம் ஒன்று கிடந்துள்ளது. சிறிய வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்து அவரே ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கோட்டூர்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பெட்ரோல் கொண்டு வந்த வாட்டர் பாட்டில் மற்றும் தடயங்களை தடயவியல் துறையினர் சேகரித்துள்ளனர். மேலும், உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த வேளச்சேரி வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அவர் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், "நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் கோட்டூர்புரம் போலீசார் வேளச்சேரியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று உடன் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த அனில்குமார், சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ் ஆகிய இரு மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.