இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திய காதல் ரோமியோ கைது... விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்
சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரோசி. இவருக்கு 19 வயதில் வைசாலி என்ற மகள் இருக்கிறார். 12ஆம் வகுப்பு முடித்து விட்டு வைசாலி கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். புதன்கிழமை மாலை வைசாலி பணிமுடிந்து சூளை அஷ்டபுஜம் சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது பக்கத்து தெருவில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் 25 வயதான தினேஷ் என்பவர் வைசாலியை வீட்டில் விடுவதாக கூறி ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
சிந்தாதிரிபேட்டை, பாரிமுனை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிய தினேஷ், வைசாலியை எண்ணூரில் உள்ள ஒரு வீட்டில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அடைத்து வைத்துள்ளார். வைசாலியை தான் காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தி தினேஷ் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார்.
இதனால் பயந்து போன வைசாலி செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு தினேஷ் தன்னை கடத்தி எண்ணூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார். உடனே தாய் ரோசி இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வைசாலியின் செல்போன் நம்பரை வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷ் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
- தனக்கு தெரிந்த பவித்ரா என்ற பெண்ணின் கணவர்தான் தினேஷ் என்றும், தெரிந்தவர் என்பதால் அழைத்ததும் ஆட்டோவில் ஏறியதாகவும் வைசாலி போலீசாரிடம் கூறினார். சம்பவத்தன்று இம்ரான் என்பவர் ஆட்டோவை ஓட்டியதாகவும், தினேஷ் பின்னால் அமர்ந்து கொண்டு தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு கத்தியை காட்டி மிரட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட தினேஷின் செல்போன் எண்ணை வைத்து அவர் சென்ட்ரலில் பதுங்கி இருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கஞ்சா போதையில் இருந்த தினேஷ் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் இம்ரான் ஆகிய இருவரை கைது செய்தனர்.தினேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 வருடங்களுக்கு முன்பே அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், பவித்ராவுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தததும் தெரியவந்தது. அதேபோல் வைசாலியையும் தன்வசப்படுத்த நினைத்து தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். தினேஷ், இம்ரான் ஆகிய இருவர் மீதும் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்