சென்னை மணலி ஓடாத மின் மீட்டருக்கு ₹73,000 மின்கட்டணம்... வாடிக்கையாளர் அதிர்ச்சி
சென்னை மணலி மாத்தூர் 3-வது பிரதான சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் சொந்தமாக சுய தொழில் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மின் கணக்கு எடுப்பு அலுவலர் பணிக்கு வந்துள்ளார். அப்பொழுது மின் அளவீடு கருவியில் பதிவான மின்சார உபயோகம் கணக்கீட்டை அவருடைய அட்டையில் குறித்துக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.
அதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டு உபயோகத்திற்கு ரூபாய் 73 ஆயிரம் மின் கட்டண தொகை வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. .இதனை கண்ட வீட்டு உரிமையாளர் இதுகுறித்து மின் கணக்கெடுப்பு அதிகாரியிடம் கேட்டபோது அவர் தனக்கு எதுவும் தெரியாது அந்த கணக்கிட்டு கருவிலுள்ள அளவையே நான் குறித்து கொடுத்துள்ளேன் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் மின்வாரிய அலுவலக அதிகாரியை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதனையடுத்து சென்னை மாத்தூர் எம்எம்டிஏ இரண்டாவது பிரதான சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று இதுபற்றி முறையிட்டபோது, அதிகாரிகள் இதுகுறித்து தலைமை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இதை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அதிகாரிக்கு இதுகுறித்து மின்னஞ்சலில் புகார் தெரிவித்து உள்ளார். உடனே இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின் கணக்கீடு கருவியை பரிசோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு பரிசோதனை செய்ததில் மின் கணக்கீடு கருவி பழுதடைந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மின் கணக்கீடு கருவி மாற்றப்பட்டு புதிய மின் கணக்கீடு கருவி பொருத்தப்பட்டு அவருக்கு பழைய தொகையை செலுத்துமாறு மின்சார வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து உள்ளது.