சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ. 50 லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி காவல்நிலையத்தில் புகார்

 


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த புவனேஷ் குமார்(29.). அவர், பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், திருவண்ணாமலை பா.ஜ.க மகளிரணி மாவட்டத் துணை தலைவராக இருக்கக்கூடிய வசந்தி எனக்கு சித்தப்பா மகள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவருக்கு எம்.எல்.ஏ சீட் தருவதாக அப்போதைய பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்தவரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளரான நரோத்தமன் மற்றும் புரோக்கரான விஜயராமன் உறுதியளித்து 1 கோடி ரூபாய் கேட்டனர்.

இதனை நம்பி நரோத்தமன் மற்றும் விஜயராகவன் ஆகியோரிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கொடுத்தேன். மேலும் பட்டியலில் பெயர் வந்தவுடன் மீதமுள்ள 50 லட்ச ரூபாய் தருவதாக கூறியிருந்தேன். பின்னர், எம்.எல்.ஏ பெயர் பட்டியலில் தனது உறவினரான வசந்தியின் பெயர் வராததால் இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது மழுப்பியதாகவும், மேலும் கொடுத்த ரூ. 50 லட்சம் பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோரிடம் முறையிட்டுள்ளேன். இதுகுறித்து முறையான பதில் கிடைக்காததால் சென்னை வந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடமும் முறையிட்டேன். ஆனால் எந்தவித பயனும் இல்லததால் புகாரளிக்க முடிவெடுத்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என பாண்டிபஜார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்த தனியார் ஹோட்டலுக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். புகார் அளித்த புவனேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் குற்றம்சாட்டப்பட்ட கிஷன் ரெட்டியின் அப்போதைய உதவியாளர் நரோத்தமன் மற்றும் புரோக்கரான விஜயராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்த இன்று ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக புகார்தாரரான புவனேஷ் குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளரான நரோத்தமன் மற்றும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விஜயராமன் ஆகியோர் எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது எனவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசடியில் நரோத்தமனின் தந்தையான சிட்டிபாபு என்பவரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்த அவர் நரோத்தமன் அவருடைய தந்தை சிட்டிபாபு மற்றும் விஜயராமன் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக நம்மிடம் தெரிவித்தார். இந்த புகார் தொடர்பான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்