எஸ்பிஐ ஏடிஎம்களில் அடுத்தடுத்து கொள்ளை : 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்

 


சென்னையில் கடந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்தடுத்த நான்கு நாட்களில் தமிழகம் முழுவதும் நூதன கொள்ளை  சம்பவம் குறித்து புகார்கள் குவிந்தன. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து துணை ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அமீர் அர்ஸ், வீரேந்தர், நசிம் உசைன் மற்றும் சௌகத் அலி ஆகிய 4 பேரை அடுத்தடுத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கொள்ளைக் கும்பலை சேர்ந்த மற்றவர்களையும் பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கொள்ளையனும், பல்வேறு திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக முக்கிய கும்பல் தலைவனான சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகள் தொடர்புடைய  சுமார் 30 வங்கிக் கணக்குகளை கண்டுபிடித்து போலீசார் முடக்கியுள்ளனர். இந்த வங்கிக் கணக்கில் அனைத்தும் பல்வேறு வங்கிகளை சேர்ந்த கணக்குகள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் 15 ஆம் தேதிக்கு முன்னதாக,  மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இதே முறையில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, சென்னை வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெளி உலகத்திற்கு இந்த கொள்ளைச் சம்பவம்  தெரிவதற்கு முன்பாக வங்கி விடுமுறையாக இருந்த சனி, ஞாயிறுகளில் சென்னையில் அவசர அவசரமாக கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொள்ளையடித்த பணத்தை ,கொள்ளையடித்த ஏடி எம் மிஷின் மூலமாகவே ஹரியானா மாநிலத்தில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற மாநிலத்திலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளதால், மற்ற மாநில போலீசாரும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், முதன் முறையாக இந்த மேவாத்திய கொள்ளையர்களை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே மற்ற மாநில போலீசார் சென்னை போலீசாரின் உதவியை நாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதிலும் எத்தனை வங்கி ஏடிஎம்களில்  கொள்ளையர்கள்  கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து எஸ்பிஐ தலைமையகத்திடம் தகவல் கேட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வங்கி ஏடிஎம் கொள்ளையில் வங்கிகள் தொடர்பான ஊழியர்கள் யாரேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வங்கி ஊழியர்கள், வங்கி ஏடிஎம் ஊழியர்கள், வங்கி ஏடிஎம்மில் பணத்தை நிரப்புபவர்கள், ஏடிஎம் மிஷின் களை ரிப்பேர் செய்யும் நிபுணர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்