ஆடுகள் வாங்கி மோசடி: சென்னையை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது.

 


திண்டிவனம்
: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மனைவி வசந்தா (54). கடந்த மாதம் 22ம் தேதி  மேய்ச்சலில் இருந்த ஆடுகளை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது, விழுப்புரம் மார்க்கமாக திண்டிவனம் நோக்கி ஆட்டோவில் வந்த பெண் உட்பட மூன்று நபர்கள் வசந்தாவிடம்  5 சிறிய ஆடு, ஒரு பெரிய ஆடுகளை ரூ.26 ஆயிரம் தொகைக்கு வாங்கிச் சென்றனர். வீட்டிற்கு சென்ற வசந்தா  அவரது மகளிடம் பணத்தை காண்பித்தபோது, அவர்கள் கொடத்த ரூ.2000 நோட்டுக்கள் அனைத்தும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. புகாரின்பேரில் மயிலம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நூதன முறையில் கள்ள நோட்டு கொடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்டது, சென்னை வண்ணாரப்பேட்டை அப்துல் சலாம் மகன் ஷேக் ஆயுப்(32), இவரது மனைவி பர்க்கத்பீ, சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் அப்துல் ஷரிப்(50) என தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இதேபோல் கள்ள நோட்டு கொடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அவர்களை மயிலம் போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.