மரணங்களை மூடி மறைக்கும் ம.பி பா.ஜ.க அரசு?” : RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல் !
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வியாழனன்று ஒன்றிய அரசு வெளியிட்ட கொரோனா எண்ணிக்கை தொடர்பான அறிக்கையில், 6,148 கொரோனா மரணங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டிருந்து.

முதல் முறையாக கொரோனா மரணம் அதிக எண்ணிக்கையில் பதிவானது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒன்றிய அரசு இது தொடர்பாக விளக்கம் ஒன்று கொடுத்தது. அதில், பீகாரில் விடுபட்ட மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட மரணங்கள் சேர்த்தால் இந்த எண்ணிக்கை பதிவாகியதாகக் கூறியது.

ஒன்றிய அரசின் இந்த விளக்கத்தால் பீகார் மாநிலத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலும் கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் 2.03 லட்சம் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் ஒப்பிடுகையில் 290 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பத்திரிகையாளர் ருக்மிணி என்பவர் ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்வி ஒன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பா.ஜ.க ஆளும் அரசோ இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 4,100 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போது ஆர்.டி.ஐ கூறிய புள்ளி விவரத்திற்கும், அரசு கூறிய தகவலுக்கும் பெரிய இடைவெளி இருப்பதால் கொரோனா மரணங்களை அரசு மறைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல், கோபால் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் கல்லறைகளில் 3,811 மரணங்கள் பதிவாகியுள்ளது. ஆனால் அரசு தகவல்களில் 104 மரணங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், மாநில முழுவதும் கொரோனா மரணங்கள் குறைத்துக் காட்டப்படுகிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.