கடையைத் திறக்கச் சொல்லி MAL: போலிஸாரை கண்டதும் காரில் ஏறிச் சென்ற சேலம் அதிமுக எம்எல்ஏ!

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று அதிகமாக இருக்கும் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. ஊரடங்கு காரணமாக இந்த கடை பூட்டப்பட்டிருந்த நிலையில், கடையில் பொருட்களை வாங்க வேண்டும் என கூறி, சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி இருவரும் கடையைத் திறக்கச் செய்து, பொருட்களை வாங்கியுள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த காவல்துறையினர் கடை திறந்திருந்ததைப் பார்த்து, கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தியபோது, அ.தி.மு.க எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் பொருட்களை வாங்கிக் கொண்டு பாலசுப்பிரமணியமும் அவரது மனைவியும் காரில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர். அரசு உத்தரவை மீறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையைத் திறக்கச் சொன்ன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.