EX-டி.ஜி.பி திரிபாதி: கண்ணீர் மல்க வழியனுப்பிய காவல்துறை அதிகாரிகள்
தமிழ்நாட்டின் காவல்துறைத் தலைவராக பதவி வகித்தவர் திரிபாதி. 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முதல் இன்று வரை 2 ஆண்டுகள் பதவிவகித்தார். தமிழ்நாட்டின், 29 வது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ஜே.கே.திரிபாதி.
30 வது டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து ஜே.கே.திரிபாதி விடைபெற்றார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற திரிபாதி, தமிழக கேடரில் 1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியவர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சியிலும் அதன்பின் சென்னைக்கும் மாற்றம் செய்யப்பட்ட இவர், தென்சென்னை இணை ஆணையராக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் நிர்வாகப் பிரிவு, தென்மண்டல ஐஜி, ஆயுதப்படை, குற்றப்பிரிவு ஐஜி, பொருளாதாரக் குற்றப்பிரிவு, காவல்துறை தலைமையிடம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் திறம்பட பணியாற்றி தனி முத்திரை பதித்துள்ளார்.
இதனையடுத்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற ஜே.கே.திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாகவும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாவும் பணியாற்றிய இவர், 2019 ஆம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றினார்.
சிறைத்துறை ஏடிஜிபியாக பணியாற்றிய போது தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் மறுவாழ்வு பெறும் வகையில் மகாத்மா காந்தி கம்யூனிட்டி கல்லூரியை தொடங்கி வைத்த பெருமை இவருக்கு உண்டு. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இவர் பணியாற்றிய போது சட்டமன்றத் தேர்தல் எந்தவித சட்டம் ஒழுங்கு பாதிப்பும் இன்றி நடந்து முடிந்தது. அதேபோல நாடாளுமன்றத் தேர்தலும் இவருடைய பணிக்காலத்தில் நடைபெற்றது. அதனையும் சிறப்பாக கையாண்டார்.
கொரோனா காலத்தில் பெண் காவலர்கள், வயது முதிர்ந்த காவலர்களை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தது, வி.ஐ.பி பயணிக்கும் சாலைகளில் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பித்தது உள்ளிட்டவை காவல்துறையினர்களிடையே மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக டி.ஜி.பியாக இருந்த ஜே.கே திரிபாதி இன்று ஓய்வுபெற்றார். இந்த நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு பொறுபேற்றார்.
பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர், முன்னாள் டி.ஜி.பி திரிபாதியை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமரைவைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் வடம் பிடித்து அழைத்து சென்று மரியாதை செய்து வழியனுப்பி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருந்த ஜே.கே திரிபாதிக்கு காவல்துறையினர் கண்ணீர் மல்க விடையளித்தனர்.