சிஏஏவுக்கு எதிர்ப்பு - இஸ்லாமிய அமைப்பு இணையவழி போராட்டம்
மத்திய அரசின் சிஏஏ சட்டத்திற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் வீட்டில் இருந்த படியே பதாகைகளை ஏந்தி பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் இணையம் வழியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம்
வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது.இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா,பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் அகதிகளாக தங்கியிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி குடியுரிமை வழங்கப்படுவதை கண்டித்து கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று காலை 11 மணி அளவில் வீட்டில் இருந்த படியே தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன பதாகைகளை ஏந்தி இணையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய வழி போராட்டம்
மத்திய அரசின் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராக மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் இருந்தபடியே சி ஏ ஏ சட்டத்திற்கு எதிரான பதாகைகளை கையிலேந்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
இதுகுறித்து மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் முகநூல் வழியாக கண்டன உரையாற்றி பேசியதாவது,கொரோணா பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் தோல்வியை மறைக்க இந்த சட்டம் அவசர அவசரமாக நடைமுறை ப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார்.மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சி.ஏ.ஏ சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால் எங்களது போராட்டம் மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் என தெரிவித்தார்.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம்.அதேபோல் கொரோனா தடுப்பு பணியில் எங்களது அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள், இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தி வருவதோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்று அவர்களது மத சடங்குகளின் அடிப்படையில் நல்லடக்கம் செய்து வருகிறோம்.எங்களது சமூகப்பணி ஊரடங்கு நீட்டிக்கும் வரை தொடரும் என்றார்.