பேருந்து சேவை தொடங்கப்படுமா? முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

 


தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 28 ஆம் தேதி திங்கட் கிழமை அதிகாலையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு படிப்படியாக ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 5 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு 28ஆம் தேதி முடிகிறது. இந்த நிலையில் 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம்? என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். அப்போது அனைத்து மாவட்டங்களிலும் பொது போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு கடந்த 21 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால், 4 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பொதுப் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

கடந்த 21 ஆம் தேதிமுதல் ஊரங்கை கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்த தமிழக அரசு, ஜூன் 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அத்துடன், மாவட்டங்களை 3 வகையாக பிரித்தும் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.