தளர்வுகள் வழங்கப்படாத மாவட்டங்கள்: மயிலாடுதுறை வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்!!

 


பொதுமுடக்க தளர்வுகள் வழங்கப்படாத மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்களால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. இதன்காரணமாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பொதுமுடக்கத்தில் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று குறையாத காரணத்தால் தளர்வில்லா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டது. இதன்காரணமாக அண்டை மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி மாவட்டத்திற்கு மது வாங்க குடிமகன்கள் குவிந்து வருகின்றனர். அவ்வகையில், புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்துக்கு தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக குடிமகன்கள் சாரைசாரையாக இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.

மயிலாடுதுறை-காரைக்கால் எல்லையான நல்லாத்தூரில் மதுவாங்க மாவட்ட எல்லைக்கு 2 கிலோமீட்டர் முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கிச் செல்கின்றனர். சோதனைச்சாவடியில் போலீசார் கெடுபிடி காட்டி, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும் குடிமகன்களில் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை.


நாளைமுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படாததால் இந்த மாவட்டத்திலிருந்து மதுப்பிரியர்கள் மதுவாங்க காரைக்காலுக்கு படையெடுப்பது தொடரும் என்பதால், சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)