சத்து மாத்திரை என கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த தாய் : இறந்து பிறந்த குழந்தை

 


பெற்றோரின் சம்மந்தம் இல்லாமல் காதல் திருமணம் புரிந்துகொண்டதால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் அப்பெண்ணின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற ஊராட்சிக்கு உட்பட்ட சோழன் நகரில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகள் தான் சுப்புலட்சுமி. 21 வயது நிரம்பிய சுப்புலட்சுமி தாதன்குட்டை என்ற தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவருடைய மகன் மணிகண்டன் என்பவரை காதலித்துள்ளார். 


ஆனால் இவர்களுடைய காதலுக்கு இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சுப்புலட்சுமி 6 மாத கர்ப்பிணிப் பெண்ணாக இருந்த நிலையில் மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு அவருடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்புலட்சுமியின் தாய் அவரை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மகள் சுப்புலெட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற தாய் கஸ்தூரி, சில சத்து மாத்திரையை அவரை உட்கொள்ள கொடுத்திருக்கிறார். அவரும் தாயின் மீது கொண்ட நம்பிக்கையில் அந்த மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். 


அந்த மாத்திரைகளை உட்கொண்ட சுப்புலட்சுமி சில மணிநேரத்தில் கடும் வயிற்று வலியால் அலறி  துடித்துள்ளார். விஷயம் அறிந்து அங்கு வந்து கணவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர், உடனடியாக சுப்புலட்சுமியை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமணையில் மீண்டும் அவருக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டு ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. அப்போது தான் சுப்புலட்சுமிக்கும் மற்றவர்களுக்கும் தாய் கஸ்தூரி கொடுத்தது கருக்கலைப்பு மாத்திரை என்று தெரியவந்துள்ளது. 


இதனை தொடர்ந்து தாய் கஸ்தூரி மீது பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அளிக்கப்பட்டதையடுத்து தற்போது கஸ்தூரி கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகின்றது.