பழிக்குப்பழியாக கழுத்தறுத்து படுகொலை - திருமங்கலம் போலீஸார் விசாரணை

 


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கடந்த 2020ம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருமங்கலத்தை அடுத்த செக்காணுரணி அருகே உள்ள பன்னியான்  கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன் மகன் ரவிக்குமார்(38) இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பன்னியான் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ரவி குற்றவாளியாக கைது செய்யப்பட்டு தற்போது செக்கானூரணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் ரவி நேற்று இரவு 12 மணிவரை செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை செக்கானூரணி திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள கரடிக்கல் ஊராட்சி பாலர் இல்லம் காட்டுப்பகுதியில் வாலிபர் கை தலையில் வெட்டுப்பட்டு கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 2020 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக பழிக்குப்பழியாக ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  தெரிய வந்தது. ரவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு  ராஜாஜி  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுப் பகுதியில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது