இளம்பெண் மரணத்தில் மர்மம்.. தற்கொலைக்கான ஆதாரங்கள் இல்லை - வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு
திருமணத்துக்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த புழல் சக்திவேல் நகரை சேர்ந்த தேஜ்பால் சிங் என்பவரின் மகள் காயத்ரி, கானுபாபு புட்ஸ் என்ற உணவுப் பொருள் விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி அவரது அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக, புழல் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரி தேஜ்பால் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், காவல் துறையினர் தன்னிடம் விசாரணை நடத்தாமல், காயத்ரி ஏற்கனவே பணியாற்றிய நிறுவன உரிமையாளர் விக்ராந்த் சர்மா என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், மகளின் உடல் தரையில் கிடத்தப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்புவதால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், புழல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் காயத்ரியின் குரல்வளையில் முறிவு ஏதும் ஏற்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்கொலைக்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடப்பதாக தெரியவில்லை என்றும் கூறி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இளம்பெண் காயத்ரி மரணம் தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டதுடன், அனுபவமிக்க அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கும் உத்தரவிட்டுள்ளார்.