பள்ளிவாசல் உலமாக்கள்,பணியாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு தமிமுன் அன்சாரி கோரிக்கை

 


உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும், கொரோனா நிவாரண உதவிகள் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல தரப்பையும் தமிழக அரசு அடையாளம் கண்டு உதவி வருவது பாராட்டுக்குரியது. இவர்களில் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களும் அடங்குவர் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், முஅத்தின்கள் உள்ளிட்ட பள்ளி பணியாளர்கள், தர்ஹா பணியாளர்கள் மற்றும் மதரஸா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவித்தொகையை இத்தருணத்தில் வழங்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வக்பு வாரியத்தின் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்தால், சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவர். இதை கனிவுடன் பரீசீலிக்குமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருக்கோவில் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருக்கோவில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொருட்டு, திருக்கோவில்களில் மாதச் சம்பளம் பெறாமல் பணியாற்றும் ஒவ்வொரு திருக்கோவில் ஊழியருக்கும் ரூ. 4,000 உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என ஆணையிட்டார்.

மேலும், இந்த உதவித்தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் திருக்கோவில் பணியாளர் அல்லாத திருக்கோவிலின் மூலம் உரிமம் பெற்றோருக்கும் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்த முதலமைச்சர், இதன் வாயிலாக, ஆக மொத்தம், சுமார் 14,000 திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் திருக்கோவில் மூலம் உரிமம் பெற்ற இதர பணியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவித்திருந்த நிலையில், அதற்காண உதவிகளை கருணாநிதி பிறந்த நாளான நேற்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.