சிறப்பு கொரோனா மையம் "குழந்தைகளுக்கு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 


தமிழ்நாடு முழுவதும் கொரோனோ தொற்றைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், சுகாதார செயலர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலும் 1032 ஆக இருந்த அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு நேற்று 600 என்ற அளவில் குறைந்துள்ளது. குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை மையம் இன்று பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லா அரசு மருத்துவமனையிலும் இதுபோன்ற மையங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 938 பேர் உள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருந்து மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. 1790 மருந்துகள் பெறப்பட்டுள்ளன. கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 35 ஆயிரம் மருந்துகள் தேவை என தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை 3,840 மருந்துகள் வரப்பட்டுள்ளன. ஆனால் நமக்குத் தேவை 35 ஆயிரமாக உள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுபோல நாமக்கல்லிலும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதற்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார்.

குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனம் 303 நிரந்தர பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு தடுப்பூசிகள் அங்கு தயாரிக்கப்பட்டு வந்தாலும் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த மையம் மேம்படுத்தப்பட்டு, மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்ற நிலையில் தற்போது தயாராக உள்ளது.

அதற்கான மூலப் பொருட்களையும், தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான ஆணையையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாளை தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல செங்கல்பட்டில் உள்ள HLL நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி இந்த ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் தேவை என்ற நிலையில், இதுவரை 5.50 லட்சம் மட்டுமே வந்துள்ளன. மேலும் 36.50 லட்சம் தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடமிருந்து கிடைத்தவுடன் அந்தந்த மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படும்" என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)