பெண் போலிஸுக்கு விலக்கு; ஆண் தாயான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அவ்வகையில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் தலைமை பெண் காவலர் கவி செல்வராணி ராமச்சந்திரன் என்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடனும் உருக்கத்துடனும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே! பெண் காவலர்களுக்கு நீங்கள் ஒரு ஆண்தாய்! வணங்குகிறேன்.
நீங்கள் முதலமைச்சர் பதவி ஏற்றதில் இருந்து வெற்றியைக் கூட கொண்டாடாமல் ஓடி வந்த களைப்போடே மக்களுக்காக உழைக்கிறீர்கள். எங்களையெல்லாம் வீட்டிலேயே இருங்கள் என்று கூறிவிட்டு உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை நேரில் சென்று பார்க்கிறீர்கள். எத்தனை எத்தனையோ எதிர்ப்புகளை கடந்து உங்களுக்கான பாதையில் மிகச்சரியாக, மிகச்சிறப்பாக பயணிக்கிறீர்கள்.
பேரறிஞர் அண்ணாவோ, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரோ சந்தித்திராத மிகப் பெரிய சவால்களை நீங்கள் சந்தித்து வெற்றி பெற்று வருகிறீர்கள். அவர்கள் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியங்களைக் கண்டு வியந்திருப்பார்கள். பெரியாரின் பெயர் சொல்லும் பிள்ளை நீங்கள். பெரியார் இருந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பற்றி பேசி பேசி பெருமை பாராட்டியிருப்பார். பேச்சாற்றல் மிக்கவர் அண்ணா, எழுத்தாற்றல் மிக்கவர் கலைஞர், செயலாற்றல் மிக்கவர் எங்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது தமிழகம்.
உங்களின் நீண்ட தூர பயணங்களில் உங்களின் வழித்துணைக்கு வந்த தொண்டர்களின் மனம் மகிழ்ச்சியில் உங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உலகமே வியந்து பார்க்கிறது, உங்களின் உழைப்பையும், உங்களின் திட்ட செயல்பாடுகளையும் கண்டு. கோட்டையில் யாருடைய நிழல் படங்களையும் அகற்ற வேண்டாம், அம்மா உணவகம் அப்படியே இருக்கட்டும் என்ற உங்களின் கட்டளைகள் எல்லோருடைய கண் புருவங்களையும் சற்றே உயர்த்த செய்திருக்கிறது. நீங்கள் மக்களின் மனதில் உயர்ந்திருக்கிறீர்கள். பழிவாங்கவா பதவி ஏற்றோம்? இல்லையே.. பழிக்கு பழி வாங்கவா பதவிக்கு வந்தோம்? இல்லை இல்லவே இல்லை! எம் மக்கள் இந்த பத்தாண்டு காலம் பட்டபாடுகளை போக்க வந்தேனென மக்களுக்காகவே உழைக்கும் உங்களை மீண்டும் ஒரு முறை நான் வணங்கத்தான் வேண்டும்.
இன்றைய அறிவிப்புக் கண்டு வியந்து போனேன். பெண் காவலர்களுக்கு ஆண்தாய் நீங்கள். எப்படி ஒரு ஆழமான சிந்தனை! பெண் காவலர்களின் மன நிலையை யாருமே இதுவரை புரிந்ததில்லை. புரிய வைக்க முயற்சித்து தோற்று போய் இருக்கிறோம். 21 ஆண்டுகள் காவல் துறையில் பணியில் இருந்திருக்கிறேன். கர்ப்பிணியாக இருக்கும் போதும் இரவு பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். VVIPகள் வருகை என்றால் பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே ரோட்டுக்கு போய்விட வேண்டும். சாப்பாட்டைப் பற்றியோ, இயற்கை உபாதைகளைப் பற்றியோ யாரும் கவலைப்படமாட்டார்கள். மாதவிடாய் காலங்களில் பெண் காவலர்களின் நிலை அய்யோ.. பாவம். சில இடங்களில் விஸ்பர் கூட கிடைக்காது. கிடைத்தாலும் மாற்ற இடம் இருக்காது. வலியுடன் இருக்கிறோம் என்று தெரிந்துமே வலிக்கும்படி பேசும் அதிகாரிகள் தான் காவல்துறையில் அதிகம்.
குழந்தை பிறந்தவுடனே பேறுகால விடுப்பு முடிந்து பணிக்குச் சென்று விடுவோம். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்று அனுமதி கேட்டு நிற்கும் அவலங்களையெல்லாம் யாரிடமும் சொல்ல முடியாது. பல நேரங்களில் அனுமதி கிடைக்க தாமதமாகும் நிலையில் சட்டை நனைந்து போகும். அதை ஆண் காவலர்கள் பார்த்து விடுவார்களே என்று கூனி குறுகி நிற்பதெல்லாம் மிகப்பெரிய வலிகள். அப்படி நனைந்து நின்ற பெண்காவலர்களில் நானும் ஒருத்தி. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு VVIPகள் பாதுகாப்பு பணிகளில் பல மணிநேரங்கள் பெண் காவலர்கள் காத்திருக்க வேண்டாம், அவர்களை பணியில் அமர்த்தவேண்டாமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவை படித்த எனது கண்கள் ஆனந்தத்தில் அழுதன.
பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்தாய் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். உங்களை காணும் ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் உங்கள் மீது கொண்ட தாயன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நாடு நலம்பெற, நீங்கள் நலமோடு இருக்க வேண்டும் . முன்னாள் பெண் காவலர் என்ற முறையிலும், உங்களின் தங்கை என்ற மகிழ்ச்சியிலும், இருகரம் கூப்பி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.