முறைகேடு நடந்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் கே.என்.நேரு

 


கடந்த கால மாநகராட்சி டெண்டர் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தவறு கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில், தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு சொந்தமான இடங்கள், சொத்துகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் நிகழ்வை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அமைச்சர் தலைமையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரகம் மற்றும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்கள் அறிவிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், தற்போது நடைபெற்று வரும் மேம்பாடு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் மழைக்காலத்தில் பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் தவிர்க்கவும், மழைநீரைச் சேமிக்க புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பிரதான ஏரிகளில் மூலமாக சென்னைக்கு தற்போது 900 MLD தண்ணீர் கிடைத்து வருவதாகவும், கூடுதலாக 400 MLD தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சியில் கடந்தகால டெண்டர் முறைகேடு குறித்து அதிகாரிகளின் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் தவறு உறுதிசெய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.