திருப்போரூரில் திரைப்பட பாணியில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் கைதி தப்பியோட்டம்!

 


செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் திரைப்பட பாணியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற கைதி, போலீசாரை ஏமாற்றி தப்பியோடியுள்ளார்.

கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்தவர் செளந்தரபாண்டியன் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து, எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செளந்தரபாண்டியனை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது, திருப்போரூரில் உள்ள உணவகம் ஓன்றில் அனைவரும் உணவு சாப்பிட்டனர். அதன் பிறகு, கை கழுவிய செளந்தரபாண்டியன் கழிப்பறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதையடுத்து, அந்த உணவகத்தில் செளந்தரபாண்டியனுக்காக நீண்ட நேரம் காத்திருந்த போலீசார் அவர் வராததால் கழிப்பறை சென்று பார்த்துள்ளனர்.

அங்கு செளந்தரபாண்டியன் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உணவகத்தின் மற்றொரு வழியின் வழியாக அவர், தப்பியோடியுள்ளது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கைதியை அழைத்துச் சென்ற போலீசார், ஆய்வாளர் கோவிந்தராஜ், மாமல்லபுரம் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக மைக் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஓஎம்ஆர் சாலை, வண்டலூர் சாலை, செங்கல்பட்டு சாலையில் சென்ற வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால், எங்கு தேடியும் கைதி கிடைக்கவில்லை.

இதையடுத்து, செளந்தரபாண்டியனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் நேற்று போலீசார் தேடி சென்றனர். போலீசார் பிடியில் இருந்து கைதி தப்பியோடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.