முகுல் ராய்பாஜகவிலிருந்து விலகிய உடனேயேமத்தியப் பாதுகாப்பு ‘கட்’

 


திரிணாமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜகவில் இணைந்த முகுல்ராய்க்கு, பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தகவல் வெளியானது.கட்சியின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ், தேசியச் செயலர் ராகுல் சின்ஹா ஆகியோரைத் தாண்டி முகுல் ராயால் செயல்பட முடியவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் இருந்து வந்தார்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு முற்றியது. இதனால் கட்சி நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த முகுல்ராய், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியில் இருந்து விலகினார்.

அத்துடன் மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தவர், பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றது. இதனையடுத்து முகுல் ராய் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்.

அவர் பாஜகவில் இருந்தபோது மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது. முகுல் ராய் மட்டுமின்றி மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்கள் பலருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மத்திய அரசின் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

முகுல் ராய் பாஜகவில் இருந்து வெளியேறி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.