“நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.. ஆராய்ந்த பிறகு இறுதி அறிக்கை”: ஏ.கே.ராஜன் பேட்டி!


 நீட் தேர்வின் தாக்கம் குறித்து இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து, கடந்த ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 10ஆம் தேதி இக்குழுவில், மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 23ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பிவைக்கலாம் என ஏ.கே.ராஜன் குழு அறிவித்தது.

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர், “தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்டுள்ள ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரையைப் பெற்று சட்ட முன்வடிவுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் பற்றி இன்று இரண்டாம் கட்ட ஆலோசனை நடத்தியது ஏ.கே.ராஜன் தலைமையிளான குழு. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏ.கே.ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நீட் தேர்வின் தாக்கம் குறித்து இன்று வரை 25 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளை இமெயில் மூலம் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்பதே

பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. சிலர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அரசு நிர்ணயித்துள்ள வரம்புக்குள் கருத்துகளை திரட்டி வருகிறோம். அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின்னர் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.

அரசாணைப்படி முடிந்தளவு ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் கண்ணும் கருத்துமாக சனி, ஞாயிறு கிழமைகளில் பரிசீலனை செய்து வருகிறார்கள்

பல்வேறு தரப்பினரிடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் மற்றும் தரவுகள் மீது விவாதம் நடத்திய பின், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆராய்ந்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்