மூன்றாம் அலை ஊரடங்கு தளர்வுகளில் கவனம் தேவை: மத்திய அரசு அறிவுறுத்தல்!

 


இந்தியாவில் இன்னும் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு தளர்வுகளை மாநிலங்கள் கவனத்துடன் அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன இந்தநிலையில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய்குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், ஊரடங்கு தளர்வுகளின் போதும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிகளை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைகள், அதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவதே நோய் பரவலை கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனாவிற்கு எதிராக உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால், தகுதியானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அரசு உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  நோய்த்தொற்று சங்கிலியை முறியடிப்பதற்கு தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ள மத்திய அரசு, கள நிலவரங்களை ஆராய்ந்த பின்னரே தளர்வுகளை அறிவிக்க வேண்டுமெனவும், ஊரடங்கு தளர்வுகளை மாநிலங்கள் கவனத்துடன் அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, பல இடங்களில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார். மூன்றாவது அலையின் தாக்கம் இப்போதே ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுவதாக கூறிய குலேரியா, நாடு முழுவதும் அடுத்த ஆறு முதல் 8 வாரங்களில் கொரோனா 3வது அலை தாக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்கள் 3வது அலையில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொறுத்தே மூன்றாவது அலையின் பாதிப்புகள் இருக்கும் என்ற அவர், நோய் தொற்று உள்ள பகுதிகளில் பரிசோதனை - கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுவதாக கூறிய எய்ம்ஸ் இயக்குநர், அடுத்த சில மாதங்களில் தடுப்பூசி போடாவிட்டால் நோய்த்தொற்று அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.அதிகப்படியான மக்கள் தொகைக்கு தடுப்பூசி செலுத்துவது பெரும் சவலாக இருப்பதாகவும், கோவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசிக்கான அதிகப்படியான இடைவெளி மோசமான முடிவாக இருக்காது எனவும் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)