கோயில் நிலம் மீட்பு: மாஜி அமைச்சர் தொடர்பா?

 


சிவகங்கை: சிவகங்கையில், மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படுபவர் ஆக்கிரமித்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.


சிவகங்கையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கவுரி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலம், தஞ்சாவூர் - பைபாஸ் சாலையில் உள்ள காஞ்சிராங்கால் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி ஆகும்.


இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பினாமி எனக்கூறப்படும் பாண்டி என்பவர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டினார். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து,ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அதிகாரிகள், நிலத்தை மீட்டு, கட்டடத்திற்கு சீல் வைத்ததுடன் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்தனர். 

கோயில் நிலத்தை அபகரித்தவர் மாஜி அமைச்சர் பாஸ்கரனின் பினாமி என கூறப்படுகிறது. மாஜி அமைச்சருக்கு தொடர்பு இருக்குமானால் அவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பக்தர்கள் வரவேற்பு


திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்துவோம் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார். இதன்படி சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. அடுத்து அடுத்து தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் மீட்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.