சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

 


தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.


தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. . மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சிவசங்கர் இல்லாமல், திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் டேரா போட்டனர். அப்பாடா... போலீஸை ஏமாத்திட்டோம் என டெல்லி காசியாபாத்தில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டிருந்த சிவசங்கர் பாபா பற்றி, சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


உடனே டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. 

இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் முன் வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சிவசங்கர் பாபா திணறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர். தான் எந்த தவறும் செய்ய வில்லை என்கிற பதிலையே சிவசங்கர் கூறி வருவதாக கூறப்படுகிறது. Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.


இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.