இ-பதிவு இணையம் முடங்க காரணம் என்ன?- ஐடி அமைச்சர் விளக்கம்!
இ-பதிவு சான்று பெறும் இணையம் முடங்கியதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்று (ஜூன் 6) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் படி சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இ-பதிவு இணையம் முடக்கம்:
இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவை உள்ளவர்களுக்கு இ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் அதிகமானோர் விண்ணப்பித்ததன் காரணமாக இ - பதிவு இணையம் இன்று காலை முடங்கியது.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது தொழிலை தொடங்கலாம் என எண்ணிய நிலையில் அதற்கும் இணையதள முடக்கம் முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
இ-பதிவு இணையதளம் முடங்கியது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் கூறுகையில், “இன்று ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இ-பதிவு இணையதளம் முடங்கியது.
விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்
என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.