கொரோனாவால் கணவர் மரணம் - உடலை மீட்டுத்தர மனைவி மனு

 


திருமணமான மூன்றே மாதத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவர் உடலை தனியார் மருத்துவமனையிடமிருந்து மீட்டுத்தர இளம்பெண் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்

ராணிப்பேட்டை மாவட்டம் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் - தேன்மொழி தம்பதிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோபிநாத் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 22 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபிநாத் உயிரிழந்தார்.

இந்நிலையில், 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உடலை ஒப்படைப்போம் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே நான்கரை லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மேலும் பணம் செலுத்தமுடியாமல் திணறும் கோபிநாத் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். தனியார் மருத்துவமனையிடமிருந்து கணவரின் உடலை மீட்டு தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.